பெட்ரோல் விலை – மத்திய அரசுக்கு நாராயணசாமி கேள்வி.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தும், மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்பட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான அணுகுமுறையே காரணம் என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது மாநில அரசின் அதிகாரத்தில் இல்லை என்றும், அது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தும், மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு, சொல்கிறது. அப்படி குறைத்தால் மத்திய அரசு இழப்பீடு வழங்குமா என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு பெட்ரோலில் 20 சதவீத வரி போடுவதாகத் தெரிவித்தார்.

பெட்ரோலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் தடையாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ரஃபேல் ஊழலால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

Exit mobile version