GST-க்குள் பெட்ரோல், டீசல் விலை; திமுக அரசு எதிர்ப்பது ஏன்? – எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? என எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில சுயாட்சி, நீட் தேர்வு, நதிநீர் பிரச்னை என எதுவாக இருந்தாலும், ஆட்சிக்கு முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு பின் ஒரு நிலைப்பாடு என்பது திமுகவிற்கு கைவந்த கலை என்று சாடியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, அவற்றை சேவை வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமென்றும், அதற்கான ஆயத்தீர்வை குறைக்கப்பட வேண்டுமென்றும் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியிருப்பதை, ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே போல், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மத்திய – மாநில அரசுகளை ஸ்டாலின் ட்விட்டர் மூலம் வலியுறுத்தியதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

இதன் மூலம், ஆட்சிக்கு முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு பின் ஒரு நிலைப்பாடு என திமுக கடைபிடிப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் கலந்துகொள்ளாத நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநில வருவாய் பாதிக்கப்படும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என திமுக கூறி வந்தது, ஆட்சியை பிடிப்பதற்காக தான் என்ற ஐயப்பாடு தற்போது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்,

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version