சென்னை புழல் சிறையில் 2-வது முறையாக நடத்தப்பட்ட ஆய்வில் கைதிகளின் அறையில் இருந்து டி.வி., பிரியாணி உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, புழல் சிறைக்குள் சிறைத்துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, ஆய்வு மேற்கொண்டு புகைப்படங்களில் வெளியான இடங்களை உறுதிப்படுத்தினார். மேலும், சொகுசு வாழ்க்கை அனுபவித்ததாகக் கூறப்படும் 5 கைதிகளும், வேறு வேறு சிறைகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு சிறைத்துறை அதிகாரிகளும் தமிழகம் முழுவதும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்நிலையில், சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் ருக்குமணி பிரியதர்ஷினி தலைமையில் 2-வது முறையாக, கைதிகள் இருக்கும் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புழல் சிறையில் உள்ள பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் ஆகிய கைதிகளின் அறையில் இருந்து டி.வி., பிரியாணி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறைக்குள் கைதிகளிடம் கொடுக்கப்பட்டது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.