பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை செப்டம்பர் 24 தேதி முதல் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென்று சி.பி.சி.ஐ.டிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழியில் நடக்க தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. கருப்பசாமியின் ஜாமின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கில் யாருக்கும் ஜாமின் வழங்க முடியாது என மறுத்துவிட்டது. இவ்வழக்கில் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் சி.பி.சி.ஐ.டி. இறுதியான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், செப்டம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.