மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், உதவி பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு மீதான விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் சிபிசிஐடி தனியாக விசாரணை நடத்தியது. ஆளுநர் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தனியாக விசாரணை நடத்தினர். நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகி சிறையில் உள்ளனர்.
இதற்கிடையே நிர்மலாதேவி பல முறை மனு தாக்கல் செய்தும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வக்கீல் கால அவகாசம் கோரியதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.