விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக எழுந்த புகாரில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு உதவியதாக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், முருகன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளிடம் பேசியதாக பேராசிரியர் நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post