மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தின்போது, மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மாநில அரசுக்கு எதிரானது என்றும், ஜனநாயக மரபுக்கு எதிரானது என்றும் மருத்துவர்கள் குற்றம்சாட்டினர். இந்த மசோதாவால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்தப்படுவது ஏழை மாணவர்களை பாதிக்கும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கவலைத் தெரிவித்தனர். இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 400 தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் காலை 6 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தையடுத்து, மத்திய அரசு மசோதாவை திரும்பவில்லை என்றால், போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் மருத்துவ சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Discussion about this post