அதிமுக எனும் எஃகு கோட்டையை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபடக் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு மற்றும் தமிழ்நாடு பொன்விழாவில் முன்னிலை உரையாற்றிய அவர், விழாவுக்காக திரண்ட தொண்டர்களால் சென்னை மாநகரமே குலுங்கியது என்றார். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு புரட்சித் தலைவருக்கு சிறப்பு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் கூறினார்.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார், பெயர் மாற்றத்துக்காக மாநிலங்களவையில் தனிநபர் மசோதா கொண்டு வந்து வரலாற்று சான்றுகளை சுட்டிக்காட்டி அண்ணா பேசியது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். அந்த மசோதா தோல்வி அடைந்தாலும், 1967-ல் அண்ணா முதலமைச்சரான பிறகு பெயர் மாற்றத்துக்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதை பன்னீர்செல்வம் நினைவுகூர்ந்தார்.
22.11.1968-ல் நாடாளுமன்றத்தில் பெயர் மாற்றத்துக்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, பின்னர் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவு, லட்சியத்தை பின்பற்றி பாடுபடுவோம் என்று கூறிய துணை முதலமைச்சர், இந்த நூற்றாண்டு விழா, ஏழை, எளியோருக்கு இன்பத் திருவிழா என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரின் புகழ், அவருடைய சக்தி எத்தனை நூற்றாண்டு ஆனாலும் குறையாது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி என்று அவர் கூறினார். தமிழ்நாட்டை அதிமுக-தான் எப்போதும் ஆளும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார். புன்சிரிப்பில் மூலமாகவே எதிரிகளை காணாமல் போகச் செய்தவர் எம்.ஜி.ஆர். என்று குறிப்பிட்ட அவர், குடும்பத்துக்காக இல்லாமல், மக்களை காப்பாற்ற கட்சி தொடங்கியவர்தான் எம்.ஜி.ஆர். என்று கூறினார்.
சீண்டியவர்களுக்கும் அள்ளிக்கொடுத்த வள்ளல்தான் எம்.ஜி.ஆர். என்று அவர் புகழாரம் சூட்டினார். மந்திரிகுமாரி படப்பிடிப்பில் தம்மை துன்புறுத்திய லண்டன் இயக்குநர் எல்லீஸ் டங்கன், பொருளாதரத்தில் நொடிந்துபோய், கோட்டையிலே எம்.ஜி.ஆரை சந்தித்ததை அவர் சுட்டிக்காட்டினார். அப்போது ஒரு பெட்டியிலே பணம் கொடுத்ததுடன், உதகையில் இருந்த அவரது எஸ்டேட்டை விற்றுக்கொடுக்க உதவியதை அவர் நினைவுகூர்ந்தார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கற்றுத்தந்த அரசியல் நாகரீகத்தின்படி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பெயரை பத்திரிகையில் போட்டதுடன், மக்களவை துணை சபாநாயகர் மூலம் அழைத்ததையும் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டினார். ஆனால் திமுக-வையும், கருணாநிதியையும் விமர்சிப்பார்கள், எனவே பங்கேற்கப்போவதில்லை என அறிக்கை மூலமாக ஸ்டாலின் மறுத்ததாக அவர் கூறினார்.
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோனபோது திமுக தடுக்காததை, மக்களுக்கு செய்த துரோகங்களை சொல்லித்தானே ஆக வேண்டும் என்று அவர் வினவினார். இலங்கை இனப்படுகொலையை திமுக, காங்கிரஸ் கூட்டணி தடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். ஆனால், இலங்கையில் போர்மேகம் சூழ்ந்ததை உணர்ந்து ஜெயலலிதா சொன்னதையும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் கோரும் தீர்மானங்கள் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றியதையும், பன்னீர்செல்வம் நினைவுகூர்ந்தார். இனப்படுகொலையை ஏன் தடுக்கவில்லை என கேட்டால் அது தவறா என அவர் வினவினார்.
கச்சத்தீவை திமுக தாரைவார்த்ததையும் சுட்டிக்காட்டிய அவர், தமிழர் நலன்காக்கும் ஒரே கட்சி அதிமுக-தான் என்றார்.
தான் உயிரோடு இருக்கும்வரை ஸ்டாலினை முதலமைச்சராக்க விடமாட்டேன் என்று வைகோ கூறினார், ஆனால் இப்போது ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்காமல் தூங்க மாட்டேன் என்கிறார், எனவே வைகோவுக்கு தூக்கம் போய்விட்டது என அவர் குறிப்பிட்டார்.
ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய துணை முதலமைச்சர், இப்போது பல இடங்களில் 20 ரூபாய் செல்லாது என வாங்குவதில்லை என்று நகைச்சுவையுடன் கூறினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திட்டங்கள் இன்றும் மக்களுக்கு சென்றுகொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
28 ஆண்டுகளாக இந்த வாய்ப்பை மக்கள் அதிமுக-வுக்கு கொடுத்துள்ளார்கள், வேறு யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். எஃகு கோட்டையான அதிமுக எனும் மக்கள் இயக்கத்தை யாராலும் ஆட்டவோ, அசைக்கவே முடியாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். எத்தனை பேர் சேர்ந்தாலும், நவக்கிரக கூட்டணி அமைத்தாலும் மக்கள் ஆதரவு அதிமுக-வுக்குத்தான் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திட்டவட்டமாகக் கூறினார்.
Discussion about this post