ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்துக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் 46 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அதன் பிறகு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு சிறுமி ஹாசினி கொலை வழக்கில் நீதிமன்றத்துக்குச் சாட்சி சொல்ல வந்த சிறுமியின் தந்தை பாபுவை, கொலை மிரட்டல் விடுத்த வழக்கு செங்கல்பட்டு நடுவர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷினி, சிறுமி ஹாசினியின் தந்தைக்கு நீதிமன்றத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தஷ்வந்துக்கு மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி சுபாஷினி தீர்ப்பளித்தார். ஏற்கனவே தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.