திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7ஆம் தேதி காலமானார். இதையடுத்து, கடந்த 14ஆம் தேதி அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் கூடி, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து, திமுகவில் தலைவர் பதவி மற்றும் மு.க.ஸ்டாலின் வகித்த பொருளாளர் பதவிக்கு வரும் 28ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய தலைவர் மற்றும் பொருளாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை அக்கட்சியன் 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய, மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, பொருளாளர் பதவிக்கு திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனிடையே, திமுவின் தலைவர் பதவிக்கு மு.க. ஸ்டாலினையும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனையும் தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாளை கூடும் திமுக பொதுக்குழுவில், கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post