எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உரையின் சுருக்கம்.
உண்மை, உழைப்பு, பண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் தனது படங்களை பார்ப்பவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விடக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் தான்.
எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார். அந்த புகைப்படம் தான் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தது.
புரட்சித் தலைவரால் தான் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை அண்ணா அறிந்திருந்தார்.
அந்த காலத்தில் சைக்கிளில் டபுள்ஸ் போனால் போலீஸ் பிடிப்பார்கள். ஆனால் ஏழை மக்களுக்காக அந்த விதியை மாற்றினார் எம்.ஜி.ஆர். அருகம்புல் ஆலமரமாக ஆசைப்படக் கூடாது. முடியவும் முடியாது.
இன்னொன்றின் நிழலில் வளர முடியும். சொந்தமாக வெயிலை தாக்குபிடித்து, சூறை காற்றுடன் மோதி, தலைநிமிரும் திராணி கிடையாது. சில அரசியல் புற்கள், ஆகாச கோட்டை கட்டி, அரியணை கனவில் மிதக்கின்றனர்.
அரை நூற்றாண்டு காலம் ரன்னர் அப் ஆக இருந்த ஒருவருக்கு, சொந்த கட்சியில் வின்னர் போஸ்டிங் தராமல் இழுத்தடித்தனர். திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு கேப்டன் பொறுப்பு கொடுத்தார்கள். அந்த மட்டில் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்.
அம்மா கட்டிய அதிமுகவுடன் மோதி ஜெயிக்கலாம் என மனப்பால் குடித்தால் ஐயோ பாவம் என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை. சொந்தமாக முடிவெடுக்கவும் தெரியாது, சொந்தகாரர்களை சமாளிக்கவும் தெரியாது.
அப்படிப்பட்ட ஒருவரா ராணுவ கட்டுப்பாடு கொண்ட அதிமுகவை எதிர்கொள்ள முடியும்?.
நாங்கள் புரட்சித் தலைவரின் வழி வந்தவர்கள். எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசளித்து பழக்கப்பட்டவர்கள்.
பாவம் அவரும் காலம் காலமாக தோல்வியை மட்டுமே பரிசாக பெற்றவர் தானே. எதிர் வரும் எல்லா தேர்தல்களிலும் அடைய வேண்டிய தோல்விகளுக்கு இப்போதே அவர் அழுது பழகிக் கொள்ளட்டும்.
அரசியல் அகராதியை எடுத்துப் புரட்டினால் ஊழல் என்ற வார்த்தைக்கு பொருளாக திமுக தான் இருக்கும். எல்லா துறைகளிலும் ஊழல் செய்த பெருமை இவர்களை தவிர வேறு யாருக்கும் கிடையாது. நில அபகரிப்பு, வன்முறை, ரவுடியிசம், இன்னும் எத்தனை எத்தனை.
பிரியாணி கடையில் ஓசி பிரியாணிக்கு சண்டை போடுவது யார்? பியூட்டி பார்லரில் பெண்ணை அடிப்பது யார்? பேன்சி ஸ்டோர் காரரை செருப்பால் அடித்தது யார்? தலைவன் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி. ஆட்சியில் இல்லாதபோதே ரவுடியிஷம் செய்பவர்களை ஆட்சியில் அமர்த்த தமிழக மக்கள் தயாராக இல்லை.
திகார் சிறையில் இருக்க வேண்டிய சில கரன்கள் தினகரன்களாக ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்திய தண்டனை சட்டத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளனவோ அத்தனை பிரிவுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வாயிதா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சில அற்ப பதர்கள், அம்மா பெயரை உச்சரிக்கும் தகுதியற்ற அல்ப ஜீவன்கள். அதிமுகவை விமர்சிக்க தகுதி இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும்.
மாபியா கலாச்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே மன்னார் குடி குடும்பம் தானே. இன்னைக்கு வெள்ளையும் சொள்ளையுமாக திரிகிறார்களே, அவர்களுக்கு எங்கிருந்து வந்தது கோட்டும் சூட்டும்.
அம்மா முன்னால் நடித்து ஊரை ஏமாற்றி நயவஞ்ச நரிகள். அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஓநாய் ஒன்று ஊளையிட்டு செல்கிறது அம்மா ஆட்சியை பார்த்து.
மணிப்பூர், அசாம், பீகாரில் இருந்து பிழைக்க வந்தவர்களை ரூ. 100, 200 கொடுத்து, கூட்டத்தை கூட்டி, பிரமாண்ட கூட்டம் என மார்தட்டிக் கொள்கின்றனர். உங்களுக்கு வெட்கம் இல்லையா, இது எவ்வளவு கேவலம்.
20 ரூபாய் அயோக்கியன் என்று சொன்னாலே ஆர்.கே. நகர் மக்களுக்கு தெரியும். டோக்கன் செல்வன் என்று சொன்னால் மக்களுக்கு தெரியும். யாராவது 20 ரூபாய் நோட்டை காட்டினாலே வட சென்னை மக்கள் விரட்டியடிக்கிறார்கள்.
சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்து விட்டு, சில பேர் இரண்டாவது இன்னிங்சிற்கு அங்கு ஜெயிக்க முடியாது என தெரிந்து அரசியல் அரிதாரம் பூசி வருகின்றனர். ஒரு முடிவை உருப்படியாக எடுக்கத் தெரியாமல் 20 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருபவர் தான் எம்.ஜி.ஆர். ஆட்சியை தர முடியும் என எகத்தாளம் பேசி வருகிறார்.
தனது சொத்துக்களை மக்களுக்காக வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர். இருக்கின்ற கட்டிடத்திற்கு வாடகை கட்டுவதை தவிர்த்து, நீதிமன்ற படியேறி வழக்குகளை எதிர்கொள்கிறவர்கள் எம்.ஜி.ஆர். பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது.
எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாதாம் அவருக்கு. உங்களுடைய பாதை உங்களுக்கு தெரியாது. தமிழகத்திற்கு தேவை என்ன என்பது உங்களுக்கு எப்படித் தெரியும். சுயமரியாதை சுடர், பகுத்தறிவு பகலவன் வகுத்து தந்த பாதையில் நடைபோடுகிறது தமிழகம். இங்கு பசுத் தோல் போர்த்தி புலியாக வலம் வருவதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இன்னொருவர் உள்ளார். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் தெரியாது. அடுத்தவர்களுக்கும் தெரியாது. அவர் மையாகமாக வந்து நிற்கிறார். தனது படத்தை ரீலிஸ் செய்ய முடியாமல் தற்போது கட்சி ஆரம்பித்துள்ளார். இத்தனை நாள் இந்த ஊரில் சொகுசாக இருந்து கொண்டு இன்று சுயநலத்திற்காக கட்சி ஆரம்பித்துள்ளார். இவருக்கு ஏழை மக்களின் கஷ்டம் எப்படி தெரியும்.
சமூக வளர்ச்சிக்காக எதிரிகளை களமாடிய பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா போல, அம்மா வழியில் தமிழக மக்களுக்காக களமாட முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நமக்கு இருக்கின்றனர்.
Discussion about this post