இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட திமுக -காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நெல்லையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜலெட்சுமி, கடந்த 2009 ஆம் ஆண்டில் முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற படுகொலையின்போது அப்பாவி தமிழர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் எனப் பலதரப்பினரை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் சுட்டு கொன்றதாகக் குற்றம்சாட்டினார். அந்த இறுதிப் போரில் லட்சக்கணக்கானோர் இறந்ததாகவும் நினைவு கூர்ந்தார். இலங்கை இறுதிப்போரின்போது, தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்தியது மக்கள் மறக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமான திமுக – காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜலெட்சுமி வலியுறுத்தினார்.