சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடியக் கனமழை பெய்து வருகிறது.
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் வரும் 7 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகிறது. இதனைத்தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி, வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களுக்குப் பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாகக் கன மழை பெய்து வருகிறது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, மழை சற்று விட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அதன்படி சென்னையில் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வடபழனி, கோடம்பாக்கம், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. சில இடங்களில் சாலையில் மழை நீர் சூழ்ந்துள்ளன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே, குறைந்த நேரத்தில் மிக அதிகளவு கனமழை பெய்வதையே ரெட் அலர்ட் என்று அழைக்கப்படுவதால், அபாயகரமான பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.