சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்  ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து, சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த 19 ஆம் தேதியன்று நாட்டுமக்கள் முன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நாட்டுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் வேண்டுகோளை முழுமனதுடன் ஏற்ற இந்திய மக்கள் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கை கடைபிடித்தனர். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுசேவை பணியாளர்களுக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை 5 மணிக்கு பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் வெளியே நின்று கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது வேண்டுகோளை ஏற்று ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்த இந்திய மக்களுக்கு பிரதமர்மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுய  ஊரடங்கு என்பது கொரோனாவுக்கு எதிரான நெடிய போராட்டத்தின் தொடக்கமே என்றும், சுய ஊரடங்கை கடைபிடித்தன் மூலம் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை நாட்டுமக்கள் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.

Exit mobile version