சீனாவில் கொரோனா வைரஸால் மேலும் 30 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வூகான், ஹூபே நகரங்களில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை மூவாயிரத்து 200ஐ தாண்டிய நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அயர்லாந்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உட்பட 22 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 30 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை 30 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம், பஞ்சாப், சிக்கிம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் தீப்ருகர் விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரசால் மேலும் 30 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் நேற்று 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பூடானிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.