தமிழகக் கோவில்களில் சிலைகள் திருட்டுப் போனது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இது அரசின் கொள்கை முடிவு என்றும், போலீஸ் விசாரணையில் இருக்கும் வழக்குகளையும், புதிய வழக்குகளையுமே சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் தமிழக அரசு கூறியது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை, மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டதாகவும், அவை அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ. இணை இயக்குநர் அலுவலகத்துக்கு தமிழக அரசு அனுப்பியதாகவும், அவை டெல்லி சி.பி.ஐ. இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்த நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டனர். வழக்கு மாற்றம் குறித்த ஆவணங்களை தமிழக அரசும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மறுத்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், சிலை கடத்தல் சம்பவத்தில், தமிழகத்தின் எல்லை தாண்டி மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர்கள் தொடர்பு இருப்பதால், தமிழக போலீசார் விசாரிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Discussion about this post