முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவி காட்சி பதிவுகள் இல்லாதது தொடர்பாக விரிவான பிரமாண பத்திரத்தை அப்போலோ நிர்வாகம் நாளை தாக்கல் செய்யவுள்ளது.
அப்போலோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை 30 முதல் 45 நாட்கள் வரை மட்டுமே சேமித்து வைக்க முடியும், அதற்கு மேல் அவை தானாகவே அழிந்து விடும் என்று அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியிருந்தது.
ஆனால் சிசிடிவி காட்சிகள் இல்லாதது குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டதா? அவ்வாறு இருப்பின் அணைத்து வைக்க உத்தரவிட்டது யார்? என்ற விவரத்தையும் பிரமாண பத்திரத்தில் விளக்கமாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, அப்போலோ நிர்வாகம் சிசிடிவி காட்சிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் விரிவான பிரமாண பத்திரமாக நாளை தாக்கல் செய்ய உள்ளது.
இதனிடையே, ஆறுமுகசாமி ஆணையம், மேலும் மூன்று மாதம் காலம் அவகாசம் கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தற்போது வரை 105 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள ஆணையம், 4 வது முறையாக கால நீட்டிப்பு கோரியுள்ளது.
Discussion about this post