சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படம் சர்கார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சன் பிக்சர்சின் கலாநிதி மாறன், விஜயை தளபதி – தளபதி என்று அழைத்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார். அரசியலை மையமாகக் கொண்டு சொல்லப்பட்ட கதை, சந்திரசேகருக்கு மிகவும் பிடித்துப் போனதாம். விரைவில் நல்ல பதிலைக் கூறுகிறேன் என்று சொல்லி அந்த உதவி இயக்குனரை சந்திரசேகர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதே கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் கூறி திரைப்படமாக எடுக்கும்படி எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சர்கார் படத்தின் முதல் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியானது. இதனைப் பார்த்த உதவி இயக்குனர் வருண், தாம் கூறிய கதை திரைப்படமாக எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொள்ள உதவி இயக்குனர் வருண் முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜிடம் உதவி இயக்குனர் வருண் புகார் அளித்துள்ளார். அவரும் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம். ஆனால் நீதிமன்றத்தின் கதவை தட்டினால் மட்டுமே நியாயம் கிடைக்கும் என்ற நிலைக்கு உதவி இயக்குனர் வருண் தள்ளப்பட்டுள்ளாராம். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை, தன்னுடைய படத்தின் கதையே திருடப்பட்ட கதை என்ற குற்றச்சாட்டிற்கு மௌனம் சாதித்து வருவது ஏன் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Discussion about this post