தமிழகத்தில் இருந்து தேர்வாகக்கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சியாளர்கள் தாங்கள் தேர்வில் வெற்றி பெற காரணம் என்று விரல்களை நீட்டக்கூடிய நிறுவனமாக திகழ்வது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. இந்த அகாடமியை தனது பெயரிலேயே உருவாக்கியவர் தான் சங்கர் தேவராஜன். இவர் தற்கொலைக்கு தள்ளப்பட்டது ஏன் என்பது குறித்து பார்போம்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் சங்கர் தேவராஜன், இவர் தனது மனைவி வைஷ்ணவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் மயிலாப்பூர் கிருஷ்ணசாமி அவென்யூவில் வசித்து வந்தார். இவர் சென்னை அண்ணா நகரில் சங்கர் அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையத்தை தொடங்கி நடத்தி வந்தார். இதில் ஆண்டு தோறும் 300க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கியதன் மூலம் இவர் சமூகத்தில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்தார்.
மனைவி மற்றும் தனது பெண்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சென்ற இவரது வாழ்க்கை பயணத்தில் கடந்த சில நாட்களாகவே புயல் வீசத்தொடங்கியதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் தனது பணியை முடித்துக்கொண்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார் சங்கர். இந்த நிலையில் நேற்று இரவு மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்துள்ளார். அந்த நேரத்தில் அவரது மனைவி, தனது குழந்தைகளுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
தனிமையில் இருந்த இவர் விரக்தியில் தனது வீட்டின் படுக்கை அறையில், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் பார்த்து அவரது வீட்டிற்கு வந்த நண்பர்கள் சிலர், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சென்ற பின் சங்கர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என புரியாமல் அவரது இழப்பை நினைத்து கதறி அழுதனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து அவரது உடல், பிரேத ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சமூகத்தில் திறமை மிக்க பல அதிகாரிகளை உருவாக்கிய சங்கர், தன்னம்பிக்கையை இழந்து தற்கொலைக்கு தள்ளப்பட்டிருப்பது அனைத்துதரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் தற்கொலை தீர்வாக இருக்காது என்பது திறமையாளர்களை உருவாக்கிய சங்கருக்கு தெரிந்திருக்காதா? என்ற கேள்வியே மனதளவில் மீண்டும் மீண்டும் எழுகிறது…