தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் அமைந்துள்ள தியாகிகள் செண்பகராமன், சங்கரலிங்கனார் மற்றும் பாஷ்யம் என்கிற ஆர்யா ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பென்சமின், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தியாகிகள் புகழ் நிலைக்கும் வகையில் அவர்களது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், வருமான வரி சோதனைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது என்று கூறினார். மேலும், புதிய தலைமை செயலகம் கட்ட 1000 கோடிக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதை பலகோடியாக உயர்த்தி கொடுத்த மர்மம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 8 வழிச்சாலை குறித்து ராமதாஸ் போன்றவர்கள் அரசிற்கு எதிராக பேசுவதாகவும், மக்களுக்கு என்ன தேவை என்பது அதிமுக அரசிற்கு தெரியும் என்றும் கூறினார். அத்துடன், மாநிலத்தின் வளர்ச்சிக்காக தான் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாகவும், கட்சி ரீதியாக எந்த உறவும் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
Discussion about this post