குரங்கணி தீ விபத்து தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஐ.ஏ.எஸ்.அதிகாரி அதுல்யா மிஸ்ரா அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி தேனி மாவட்டம் குரங்கணிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர், எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, தீ காயங்களுடன் மீட்கப்பட்ட 27 பேர் தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து தொடர்பாக, விசாரணை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டார். தீ விபத்து குறித்து குரங்கணி மலைப்பகுதியில் நேரடி ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் என சுமார் 100 பேரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில், குரங்கணி தீ விபத்துக்கான காரணம் குறித்து முழு அறிக்கையை விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா, சென்னை தலைமைச்செயலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வழங்கினார்.
அதில், மலையேற்றம் செய்ய குழுவில், பயிற்சி பெற்ற பயிற்சியாளர் இல்லை என்றும், மலையேற்றம் சென்றவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வனத்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும், வரும் காலங்களில் பயிற்சிப்பெற்ற பணியாளர்களையே நியமிக்க வேண்டும் என்றும் வலியுத்தப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால், தகவல் தெரிவிக்கும் இஸ்ரோவுடன் இணைக்கப்பட்ட Fire Alert System உருவாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post