கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் கைது

தேசிய பேரிடர் பயிற்சியின் போது கோவை கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் அவரது தந்தை அளித்த புகாரில் பேரில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில், கோவை அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவி லோகேஸ்வரி என்பவரும் பயிற்சியில் கலந்து கொண்டார்.

கட்டடத்தின் 2-வது மாடியில் இருந்து குதிப்பது போலவும் அவரை காப்பாற்ற மாணவர்கள் சிலர் வளையை பிடித்து நிற்பது போலவும் தயார்நிலையில் இருந்தனர். மாடியில் இருந்து குதிக்க லோகேஸ்வரி தயக்கம்காட்டியநிலையில், உற்சாகப்படுத்திய பயிற்சியாளர், ஒரு கட்டத்தில் மாணவியின் கையை பிடித்து கீழே குதிக்க வைத்துள்ளார்.

தயார்நிலையில் இல்லாத லோகேஸ்வரிக்கு, முதல் மாடி சுவர் பகுதியில் மோதியதில் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லோகேஸ்வரி உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version