புளோரன்ஸ் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தள்ளார். இதுவரை அங்கு புயலுக்கு 11 பேர் வரை பலியாகியுள்ளனர்.
அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘புளோரன்ஸ்’ புயல், அமேரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.
வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் சாலைகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்ததால், குடியிருப்புவாசிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன. கரோலினாவில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளில் மின்சார இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வடக்கு கரோலினாவில் உள்ள 8 கவுண்டிகளை பேரழிவு பாதித்த இடங்களாக டிரம்ப் அறிவித்ததையடுத்து சொத்துக்களை இழந்தவர்களுக்கு மானியங்கள் மற்றும் வங்கிக் கடன் கிடைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post