அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாஸ், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ், தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
கருணாசின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் எம்.எல்.ஏ.வாக நீடிக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியில் உள்ள கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை செய்துள்ளனர்.
கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். இந்நிலையில், பேரவைத் தலைவர் தனபாலுடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார். அதேபோல், அமைச்சர் தங்கமணி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொறடா ராஜேந்திரன், எம்.எல்.ஏ. ஜக்கையன் ஆகியோரும் பேரவைத் தலைவருடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்நிலையில், ஆலோசனைக்குப் பிறகு கருணாஸ், மற்றும் தினகரன் ஆதரவாளர்களான ரத்னசபாபதி, பிரபு, கலைச்செல்வன் உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதி இழப்பு சட்ட விதி 6 – இன் படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.