அவதூறு பேசிய வழக்கில் கைதான கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனருமான நடிகர் கருணாஸ், முதலமைச்சர் மற்றும் காவல் உயரதிகாரியை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. கருணாசின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தநிலையில், அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன்பின்னர், கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட கருணாஸ், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.