கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடரந்து மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நகரின் ஒரு சில இடங்களில் காலை 8மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரத்திற்கு ஆளாகினர். சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தியாகராய நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழையை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதேபோன்று, புதுக்கோட்டை ,சேலம், நாகை, கடலூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.