1983-ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையின் வெலிக்கடை சிறையில் 37 தமிழர்கள் கொல்லப்பட்டது கண்டு மனம் வெதும்பினார் எம்ஜிஆர். இதனை ஐ.நா.சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஈழத்தமிழர்களுக்காக மாநில அரசின் சார்பில் முழுஅடைப்பு போராட்டத்தை நடத்தினார். அவர்களின் துயர்துடைக்க 20 லட்ச ரூபாயை கொடுத்துதவினார். 2 விமானங்களில் உதவி பொருட்களையும் 24 டன் உணவுப் பொருட்களையும் அனுப்பி வைத்தார். இதையடுத்து ஈழ தமிழ்த்தலைவர்கள் சென்னை வந்து எம்ஜிஆருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.
எம்ஜிஆரின் அறிவுரையின் பேரில் ஐ.நா.சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஈழத்தமிழர்கள் பிரச்னை குறித்து எடுத்துரைத்தார். இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் எம்ஜிஆர்.
1984-ம் ஆண்டு தமிழக மருத்துவக்கல்லூரிகளில் ஈழத் தமிழ் மாணவர்களுக்கு இடம் வழங்க வழிவகை செய்தார் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாது தனது தலைமையில் கொட்டும் மழையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து 1986-ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது முறையாக மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தார் எம்ஜிஆர். ஈழ தமிழ் அகதிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக நிலம் வழங்க உத்தரவிட்டார்.
1987-ம் ஆண்டு சென்னை வந்த விடுதலைப்புலிகள் முதலமைச்சர் எம்ஜிஆரை நேரில் சந்தித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஈழத்தமிழர்களுக்கு உதவ 4 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கினார் எம்ஜிஆர். இதற்கு தனிப்பட்ட முறையில் எம்ஜிஆருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். எம்ஜிஆரின் முயற்சியால் இலங்கை அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக உணவுப்பொருள் விநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் வீதிகளில் எம்ஜிஆர் புகழ் ஓங்குக என முழக்கம்.
எம்ஜிஆர் ஆசியுடன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லி வந்தடைந்தார். டெல்லியில் எம்ஜிஆருடன் பிரபாகரன் 3 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். எம்ஜிஆர் எடுத்த தொடர் முயற்சிகளால் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் எதிர்பாராதவிதமாக 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி எம்ஜிஆர் காலமானார். ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் அவர் காலகட்டத்திலேயே ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.