ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்குல் மாவட்டம், டல்ச்சேர் பகுதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக வாயுவின் மூலம் உரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலைக்கு பிரதமர் நாட்டினார். பின்னர் பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய உரத் தொழிற்சாலை மூன்று ஆண்டுகளில் உற்பத்தியை தொடங்கும் என்றார். அந்த விழாவிலும் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக குற்றம்சாட்டிய பிரதமர், மூடிய தொழிற்சாலைகளை திறக்க முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதன் பின்னர், ஜர்சுகுடா நகரில் மாநிலத்தின் 2வது விமானநிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், புதிய விமான நிலையம் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மாநிலமாக ஒடிசாவை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் தாது வளம் நிறைந்த மேற்கு பகுதியில், இனி முதலீடுகளும், தொழில் வளமும் பெருகும் என நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் கிழக்கு மாநிலங்களான ஒடிசா, மேற்குவங்கம், அசாமை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை சமநிலைப்படுத்த முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Discussion about this post