சத்திஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம்,ஆகிய மாநில சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. தெலங்கானாவில் சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இந்தநிலையில், 5 மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் டெல்லியில் வெளியிட்டார்.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக நவம்பர் 12 ஆம் தேதியும், 2-ம் கட்டமாக 20-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 16-ம் தேதி தொடங்குகிறது. 2-ம் கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் நவம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகள்,மிசோரமில் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 28 -ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மற்றும் 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்ட சபைகளுக்கான தேர்தல் டிசம்பர் 7 -ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 12-ம் தேதி தொடங்குகிறது.
5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியிடப்படும்.
தேர்தல் பணிகள் அனைத்தும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்தார்.
Discussion about this post