ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளதாக, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
பரம எதிரிகளாக இருந்து வந்த வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே நட்புறவு மலர்ந்துள்ளது. தென்கொரியா எடுத்த முயற்சியால், இரு துருவங்களாக செயல்பட்டு வந்த அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப்பேசினர்.
அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உறுதி அளித்தார். இந்த நிலையில், 3-நாள் பயணமாக பியாங்யாங் நகருக்குச் சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், ஏவுகணை என்ஜின் சோதனை தளம் மற்றும் ஏவுதளம் ஆகியவற்றை நிரந்தரமாக அழிக்க வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.
அமெரிக்கா உறுதியான நடவடிக்கைகளோடு வரும் பட்சத்தில், நியோங்பியோனில் உள்ள பிரதான அணு உலை கூடத்தை அழிக்க தயராக இருப்பதாக வடகொரியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.