எம்.ஜி.ஆரின் அப்பா கோபாலமேனன் இறந்ததும் அவரது தாய் சத்தியபாமா மற்றும் அண்ணன் சக்கரபாணியுடன் அவர் பசியின் கொடுமையை அனுபவித்தவர்.
அதனால்தான் ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்கும் சத்துணவு திட்டத்தை கொண்டு வருவதிலும், அடித்தட்டு மக்களின் வறுமையைப் போக்கும் திட்டங்களை கொண்டு வருவதிலும் அவர் மிகுந்த அக்கறை காட்டினார்.
எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். பாடல்கள் மூலமாக தன்னம்பிக்கை விதைகளை விதைத்ததில் எம்.ஜி.ஆருக்கு நிகரான நடிகர் எவரும் இல்லை.
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள் !
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
அடிமைப் பெண் பட சூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
திராவிட அரசியலுக்கான தேவையையும், அண்ணாவையும் பெரியாரையும் அவர் எம்.ஆர்.ராதா மூலமாகத்தான் அறிந்துகொண்டார். அதுவரை காங்கிரஸ்காரராக இருந்தவர், 1953-ம் ஆண்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.
“காமராஜர் எனது தலைவர், அண்ணா எனது வழிகாட்டி” என்று வெளிப்படையாகவே அவர் குறிப்பிட்டார்.
அண்ணாவின் இழப்புக்குப் பின் கிங்-மேக்கராக வலம் வந்த எம்.ஜி.ஆர், கருணாநிதியை கட்சியின் தலைமை ஏற்க வைத்து அழகு பார்த்தார்.
1971-ல் கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அக்டோபர் 17 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ உருவானது.
கண்ணதாசன், வாலி என அரசியல் அறிந்த கவிஞர்களை அவர் தனது நண்பர்களாக்கிக் கொண்டதால் மிகச் சிறந்த திரையிசை தத்துவப் பாடல்கள் தமிழுக்கு கிடைத்தன.
சினிமாவில் அவர் பேசிய வெற்றி வசனங்களும், அவரது தலை சிறந்த தத்துவப் பாடல்களும் அவருக்கு ஒரு மகத்தான தலைவர் இமேஜை கொடுத்தன. 1977-ல் அவரை ஆட்சியைப் பிடிக்க இதுவும் பேருதவியாக அமைந்தது.
“சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.” என்பது எம்.ஜி.ஆரின் பொன்மொழி.
Discussion about this post