ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம் வரும் 20ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் மத்திய அரசின் அனுமதி பெறாமல் 3 ஆயிரத்து 500 கோடிக்கு முதலீடு செய்ததற்கு கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில் சிபிஐயும் அமலாக்கதுறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் வர்த்தகம் தொடர்பாக வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கோரி கார்த்திக் சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்த போது கார்த்திக் சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்க க்கூடாது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம் கன்வில்கர் மற்றும் டி.ஒய் சந்திர சூட் ஆகியோர் அடங்கிய அமர்வு , வரும் 20 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டனர்.
மேலும் கார்த்தி சிதம்பரம் தமது விமான பயண திட்டம் மற்றும் நாடு திரும்பும் நாள் உள்ளிட்ட விவரங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். தமது வெளிநாடு பயணத்தை முடித்த பிறகு பாஸ்போர்டை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post