அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. எதிர்ப்பையும் மீறி வாங்க வேண்டிய அளவுக்கு எஸ்-400 ஏவுகணையில் அப்படி என்ன சிறப்பு,… இதோ அறிந்து கொள்வோம்..
இந்தியாவின் எல்லையானது பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் சுமார் 4000 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. எனவே எல்லை பாதுகாப்பில் இந்திய ராணுவப்படையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. எதிரி நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஆயுதங்களை வாங்குவதும், அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் உலக நாடுகளில் வழக்கமான ஒன்று. அதைத்தான் இந்தியாவும் செய்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி என்ற ஏவுகணை இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் போதாதென்று தான், தற்போது எஸ்-400 ஏவுகணை வாங்க ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது.
எஸ் – 400 என்றால் surface – 400 என்று பொருள். அதாவது தரையில் இருந்து புறப்பட்டு 400 கி.மீ. பயணித்து தாக்க வரும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஆற்றல் பெற்றது இதன் சிறப்பம்சம். உலகிலுள்ள மிகவும் அதிநவீன ஏவுகணை தளவாடங்களில் ஒன்றாக ரஷ்யாவின் எஸ் – 400 கருதப்படுகிறது. ஒரு எஸ்-400 தொகுதியில் 8 ஏவுகலன்களும், 112 ஏவுகணைகளும் இருக்கும். இதுபோன்ற 4 தொகுதிகளை தான் இந்தியா வாங்குகிறது. எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து, இந்தியாவின் முக்கிய நகரங்களை காக்கும் வகையில், இந்த தளவாடங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியா இந்த ஏவுகணைகளை வாங்க அமெரிக்கா ஏன் எதிர்க்க வேண்டும். உக்ரைன் நாட்டின் கிரீமியா தீவை சமீபத்தில் ரஷ்யா ஆக்ரமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது. அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதற்காக “பொருளாதார தடைகள் மூலம் அமெரிக்கா எதிரி நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை” என்ற சிறப்பு சட்டத்தையும் இயற்றியது. ஆனால் இது ஐ.நா.சபையின் சட்டம் ஒன்றும் அல்ல, அமெரிக்காவின் சட்டம் தான் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. எனவே தான் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க ஏவுகணையின் விலை என்ன தெரியுமா?. இந்திய மதிப்பில் 40 ஆயிரத்து 300 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா. சுகாதாரத்திற்கும், கல்விக்கும் பெரும் நிதியை ஒதுக்க வேண்டிய சூழலில் இருந்தாலும், ஆயுதங்களே ஜனநாயகத்தை காக்கும் அரண்களாக திகழ்கிறது. அந்த வகையில் எல்லையில் உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.