தற்போது தான் செய்து கொண்டிருப்பதை 40 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால், இப்போது புலம்பிக் கொண்டிருக்கமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மாணவர்கள் கலைவிழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கமல்ஹாசன் விழாவைத் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த மருத்துவக்கல்லூரியை உருவாக்கிய ஐடாஸ்கடரின் பெயரும், முகமும் மறந்து போனாலும், அவர் விட்டுச் சென்ற இந்தக் கல்வி காட்டில் மலர்கள் மலர்ந்து கொண்டும், கனிகள் கனிந்து கொண்டும் இருக்கும் என கமல் தெரிவித்தார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போது தான் செய்து கொண்டிருப்பதை 40 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால், இப்போது புலம்பிக் கொண்டிருக்கமாட்டேன் என்று குறிப்பிட்டார்.
‘நமக்கு எதுக்கு இதெல்லாம், நமது சட்டை கசங்கிவிடும்’ என்று நினைத்து அரசியலுக்கு வர பயந்ததாகக் குறிப்பிட்ட கமல்ஹாசன், இனி பயப்படமாட்டேன் என்று தெரிவித்தார்.
கல்லூரியில் கட்சி அரசியல்தான் பேசக்கூடாது, மக்களுக்கான அரசியல் பேசலாம் என கமல் குறிப்பிட்டார். மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், தற்போது ஒதுங்கிவிட்டால், வயதான பிறகு தன்னைப்போல் வருத்தப்படும் சூழ்நிலை உருவாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசினால் சட்டை கசங்கிவிடும் என்று இத்தனை ஆண்டுகளாக பயந்து ஒதுங்கிய நீங்கள் இப்போது திடீர் புரட்சியாளராக மாறிவிட்டதாக கூறுவதை உங்கள் அண்ணன் கூட ஏற்கவில்லையே என்பதுதான் பொதுமக்கள் கேள்வி.