சுனாமி தாக்கிய இந்தோனேசியாவின் பலு நகரத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்களாக கிடப்பதால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவின் மத்திய பகுதியில் கடந்த 28ம் தேதி மாலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம், ரிக்டர் அளவில் 7.5 புள்ளிகளாக பதிவானது. இதில் சுலவேசி தீவின் பலு, டோங்காலா உட்பட 3 நகரங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நில நடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியை சுனாமி தாக்கியது. 18 அடி உயரத்துக்கு எழும்பிய ராட்சத அலைகள் கடலோர பகுதி வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை நாசமாக்கின. பலு நகரில் மொத்தம் 3.5 லட்சம் பேர் வசித்து வந்தனர். இவர்களில் ஏராளமானோரை காணவில்லை.
இதற்கிடையே நேற்று மாலை நிலவரப்படி 832 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என இந்தோனேஷியாவின் தேசிய பேரிடர் அமைப்பு தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் பலு மருத்துவமனை பின்புறத்தில் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
நோய் பரவுவதை தடுக்க இறந்தவர்களின் சடலங்களை மொத்தமாக புதைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்தோனேஷிய துணை அதிபர் ஜூசப் கல்லா கூறியுள்ளார். பலு மற்றும் டோங்காலா நகரங்களில் உள்ள கட்டிடங்கள், பாலங்கள், ரோடுகள் எல்லாம் சிதைந்து கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன.
பூகம்பம் மற்றும் சுனாமி பாதித்த பகுதிகளை இந்தோனேஷிய அதிபர் ஜேகோ விடோடே நேற்று மாலை பார்வையிட்டார். பேஸ்புக் அழைப்பு மூலம் பலு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பீச் திருவிழா நடந்துள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கானோர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அவர்களை தற்போது காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களின் போட்டோக்களை உறவினர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டு தேடிவருகின்றனர்.