இந்தியாவுடனான அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை முதலில் ஏற்ற இந்தியா, பின்னா் அதனை ஒரே நாளில் ரத்து செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
பேச்சு நடத்துவதற்கு தற்போது, அழைப்பு விடுத்தநிலையில், ஜூலை மாதம் நடந்த சம்பவத்தைக் சுட்டிக்காட்டி, பேச்சுவாா்த்தையை இந்தியா ரத்து செய்ததாக அவர் குறிப்பிட்டார். பேச்சுவாா்த்தைக்கு இந்தியா மறுப்புத் தெரிவித்த போதும், அதற்கான வாய்ப்புகளை முழுவதுமாக பாகிஸ்தான் மறுக்காது என்றார். அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது என்றும் குரேஷி தெரிவித்தார்.
இந்தியா, இதுபோன்று முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்வது காஷ்மீரில் நல்ல சூழ்நிலை உருவாக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். அமைதி, ஸ்திரத்தன்மை, நல்லுறவு, மக்களின் மேம்பாடு ஆகியவற்றையே பாகிஸ்தான் விரும்புவதாகவும், போரை தவிர்ப்பதாகவும் குரேஷி தெரிவித்தார்.