தமிழக ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை விமர்சித்து நக்கீரன் கோபால் செய்தி வெளியிட்டதே பிரச்னைக்குக் காரணம்.
தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் கோபாலை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124இன் கீழ் ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், மருத்துவ சோதனைக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் நக்கீரன் கோபாலை, சென்னை எழும்பூர் 13ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஆளுநரை பணி செய்யவிடாமல் கோபால் தடுத்ததாக கூறப்படுவதற்கு முகாந்திரம் இல்லை என்றார். அதேபோல் ஆளுநர் தன்னுடைய புகாரில், கோபால் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இத்தகைய வழக்குகளில் கைது செய்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று கூறினார். எனவே கோபாலை நீதிமன்ற காவலின் கீழ் சிறைக்கு அனுப்புமாறு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
Discussion about this post