ஆசிய கோப்பை கிரிக்கெட்- இந்தியா அபார வெற்றி

வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-4 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
துபாயில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்து வீச்சு காரணமாக வங்காளதேச அணி, 49.1 ஓவர்களில் 173 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஜோடி சிறப்பான தொடக்கதை தந்தது. அரைசதம் அடிப்பார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகார் தவான் 40 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ராயிடு 13 ரன்களிலும் தோனி 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணி 36.2 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

 

Exit mobile version