நாடு முழுவதும் பசு மாடுகள், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, அப்பாவி பொதுமக்கள் சில குறிப்பிட்ட தரப்பினரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை கடந்த 17ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது. இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படுவதை தடுக்கும் விதமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் அந்தஸ்தில், சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும் சிறப்பு பணி குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post