சென்னையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடந்தது.
இதில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் பணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும், கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாவட்ட செயலாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் 30-ந் தேதி நடக்கவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு தொண்டர்களை திரளாக அழைத்து வருமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post