அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டங்கள் வரும் 17ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், அதிமுக தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவு பெற்று 47வது ஆண்டு தொடங்குவதை குறிக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.அதன்படி 17-ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை ஒன்றியங்கள், நகரங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லியில் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, 17-ம் தேதி சிவகாசியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அதே 17-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் கூட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை அண்ணா நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், வேடசந்தூர் ஒன்றியத்தில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மு. தம்பிதுரை உரையாற்றுகிறார்கள்.
திண்டுக்கல் மேற்கு பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், கபிலர்மலை ஒன்றியத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் பி. தங்கமணி, ஆர்.கே. நகரில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, கரந்தை பகுதியில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post