மத்திய, மாநில அரசுகளின் துணையோடு அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு கோவை தொழில்துறை அரசு வேகத்தில் தயாராகி வருகிறது.
கோவை புறநகர் பகுதிகளில் மோப்பிரிபாளையம், கள்ளப்பாளையம் ஆகிய இடங்களில் கொடிசியாவின் தொழிற்பூங்காக்கள் தயாராகி வருகின்றன. மோப்பிரிபாளையத்தில், 260 ஏக்கரிலும், கள்ளப்பாளையத்தில் 140 ஏக்கரிலும் தொழிற்பூங்காக்கள் அமைய உள்ளன. இங்கு அமையும் 600 புதிய நிறுவனங்கள் மூலம், ஆயிரம் தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இதேபோல், கொசிமா தொழிற்பூங்கா, கவுமா தொழிற்பூங்கா, கம்ரஸர் மோட்டார் தயாரிப்புக்கான கிளஸ்டர் அமைப்பு, நகைத் தொழிலாளர்கள் குழு சார்பில் பொது பயன்பாட்டு மையம் என பல ஆயிரம் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய தொழிற்பூங்காக்கள், பொது அமைப்புகள் உள்ளிட்டவை கோவையில் அமைய உள்ளன.
கோவையை ராணுவ தளவாட பொருட்கள் தயாரிப்பு கேந்திரமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் பலவும், ராணுவத்துக்கு தேவையான பொருட்களை தயாரித்து வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதேபோல், மாநில அரசின் துணையுடன் அடுத்த ஆண்டு கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது. கோவை புறநகர் பகுதிகளில் தொழிற்பூங்காக்களும், தொழிலை முன்னேற்றும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் கோவை மாவட்டம் தொழில்துறையில் நாடு தழுவிய அளவில் முன்னணி இடத்தை பிடிக்க இருக்கிறது. இதனால் கோவை மாவட்ட தொழிற்துறையினர் உற்சாகத்தில் உள்ளனர்.
Discussion about this post