ஸ்ரீதேவி இடத்தில் ரகுல் ப்ரீத்சிங்

தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவர் என்டிஆர் என்று அழைக்கப்பட்ட என்.டி.ராமாராவ். அவரது வாழ்க்கை வரலாறு “என்டிஆர் கதாநாயகுடு” என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா இப்படத்தில் தனது தந்தை வேடத்தில் அதாவது என்டிஆர் வேடத்தில் நடிக்கிறார். முதல் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் இந்தி திரையுலகின் அட்டகாச நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார். என்டிஆரின் இரண்டாவது மனைவியான லட்சுமி சிவபார்வதி கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகை ஆம்னி நடிக்கிறார்.

ஹானஸ்ட் ராஜ் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த அதே ஆம்னி தான் இவர். சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்கிறார். பழம்பெரும் தயாரிப்பாளர் நாகி ரெட்டி வேடத்தை பிரகாஷ் ராஜ் ஏற்றுள்ளார். என்டிஆரின் பெரும்பாலான வெற்றிப்படங்களில் நடித்த நடிகைகள் சாவித்ரி மற்றும் ஸ்ரீதேவி. சாவித்ரி வேடத்தில் நித்ய மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார்.

ஆனால் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் போவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங், ஸ்ரீதேவி வேடத்தில் நடிப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதியும், இரண்டாம் பாகம் அதே ஜனவரி மாதத்தின் 24ந் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version