பரியேறும் பெருமாள் – திரைவிமர்சனம்

ஆணவக் கொலைகள் குறித்து அதிகம் பேசப்படும் காலகட்டத்தில் வெளியாகி இருக்கிறது அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள பரியேறும் பெருமாள்.

ஒற்றை வரி செய்தியாய் நாளிதழ்களில் நாம் கடந்து போகும் உயிரிழப்புகளுக்கு பின்னால் உள்ள சாதிய கட்டுமானத்தின் கொடூர முகங்களை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது பரியேறும் பெருமாள்.

இன்றைய காலகட்டத்தில் சாதியம் பற்றி பேசத்தான் வேண்டுமா? என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இடஒதுக்கீடு பற்றிய தெளிவும், புரிதலும் இல்லையென்றே சொல்ல வேண்டும். இளைஞர்கள் மத்தியில் இடஒதுக்கீட்டை ஒரு பேசுபொருளாக மாற்றிய வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் பாராட்டுக்குரியவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் புளியங்குளம் என்ற சிறிய கிராமத்தில் வேட்டை நாய் கூட வளர்க்க அனுமதி மறுக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஒரு பிரதிநிதி தான் பரியன். கிட்டத்தட்ட பறையன் என்ற சொல்லுக்கு இணையாக கதாநாயகனுக்கு பெயர் சூட்டியுள்ளார் இயக்குனர்.

கருப்பி என்ற அந்த வேட்டை நாய் வேட்டையாடப்படுவதை, இந்த சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்டையாடப்படுவதுடன் ஒப்பிட்டுள்ளார் இயக்குனர். படம் நெடுகிலும் அந்த வேட்டை தொடர்கிறது.

சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவராக கதாநாயகன் கதிர். விஜய் தேவரகொண்டாக்காக்கள் கொண்டாடப்படும் சூழலில் கவனம் பெறாமல் போகும் கதிர் போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் சமூகத்தின் உள்ளது. இந்த படத்தில் பரியன் பெருமாளாக ஒடுக்கப்பட்டோரின் வலியை ஒட்டுமொத்தமாக சுமந்துள்ளார் கதிர்.

இடைநிலை சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் சுயசாதி தம்பட்டத்திற்காக படுகொலைகளை போகிற போக்கில் நிகழ்த்தும் பாத்திரத்தில் கராத்தே வெங்கடேஷ் கவனம் ஈர்த்துள்ளார்.

தமிழ் சினிமாவின் லூசுப் பெண் கதாபாத்திரத்திற்கு சற்று இணையாக வந்து செல்கிறார் கதாநாயகி ஆனந்தி. ஊருக்கே தெரிந்த சாதிய விவகாரம், அவருக்கு சற்றும் தெரியாமல் முட்டைக் கண்களை உருட்டி பேசுவது சற்று ஒட்டாமல் உள்ளது.

பாடல்களை, சாதியத்திற்கு எதிரான பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். கருப்பி என்ற பாடலில் மேற்கத்திய இசையோடு முழக்கமிடும் அவர், வந்தனம் என்ற பாடலில் ஆண்டனி தாசோடு நாட்டுப்புற இசையில் நர்த்தனமாடுகிறார். நான் யார் என்ற பாடல் படத்திலும் ஒட்டவில்லை, இசையில் ஈர்க்கவில்லை.

நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். படம் நெடுகிலும் நீலம் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. இரட்டை குவளை சமமாக நிலைநிறுத்தப்படுவதாக படம் முடிகிறது.

ஒட்டுமொத்தத்தில் இந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சி மீது வீசப்பட்ட கல் பரியேறும் பெருமாள்.

Exit mobile version