திமுக தலைவராக இருந்த கருணாநிதி இருந்த போது, கட்சியில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். இந்தநிலையில், கடந்த 7ஆம் தேதி கருணாநிதி காலமான பிறகு, கட்சியில் அழகிரி மீண்டும் சேர்க்கப்பட்டு, பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பு ஏற்படாததால், வரும் 5ஆம் தேதி கருணாநிதியின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த இருப்பதாக அழகிரி தெரிவித்திருந்தார். அப்போது, ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டிக்காட்ட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதனிடையே திமுகவில் தன்னை சேர்த்துக்கொள்ளும்பட்சத்தில் ஸ்டாலினை தலைவராகவும் ஏற்கவும் தயார் என்று அழகிரி தெரிவித்திருந்தார். இருப்பினும், கட்சியில் இருந்து எந்தவொரு அழைப்பும் வராததால், பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் அழகிரி மீண்டும் ஆலோசனையை தொடங்கி உள்ளார். இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, சென்னையில் ஒரு லட்சம் பேருடன் அமைதிப்பேரணி, நிச்சயமாக நடக்கும் என்றார். கருணாநிதியின் மகனான தான், சொன்னதை செய்வேன் என்று அவர் கூறியிருப்பது, திமுகவினரிடயே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post