மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவின் அதிபர் தேர்தல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. லிபரல் கட்சியைச் சேர்ந்த சூசானா கபுட்டோவா அதில் வெற்றி பெற்றதோடு, ஸ்லோவாகியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையையும், குறைந்த வயதில் அதாவது 45 வயதில் அதிபர் ஆனவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தனது சொந்த ஊரான பெஸிநாய்க் பகுதியில் நிலத்தில் நச்சுப்பொருட்கள் நிரப்பப்படுவதை எதிர்த்து மிகப் பெரும் சூழலியல் போராட்டத்தை ஒரு பத்து ஆண்டுகள் முன்னெடுத்து நடத்தியதற்காக இவர் முதன்முதலில் அறியப்பட்டார். இதற்காக இவருக்கு, 2016 ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.
ஊழலை ஒழிப்பேன் என்பதே சூசானாவின் முக்கியத் தேர்தல் முழக்கமாக இருந்தது. அரசியல் கட்சிகளோடு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளையும் வழக்கறிஞர்களையும் பதவியில் இருந்து அகற்றுவேன் என்று மேடைகளில் துணிந்து முழங்கினார். கருக்கலைப்பைச் சட்ட விரோதமாகக் கருதும் நாட்டில், கருக்கலைப்பு பெண்களின் உரிமை என்று தனது தேர்தல் பரப்புரைகளில் தொடர்ந்து அறிவித்தார்.
அரசியல் ஆதாயத்துக்காகப் பொய் பேசாமல், உண்மையைப் பேசினார். எந்த வேட்பாளரையும் தரக்குறைவாக அவர் பேசவில்லை. எதிரிகளின் குறைகளைக் கண்ணியமாகவே விமர்சித்தார். 45 வயதே நிரம்பிய சூசானாவுக்கு வழக்கறிஞர், ஊழல் எதிர்ப்பாளர், சூழலியல் போராளி எனப் பல அடையாளங்கள் இருந்த போதும், அரசியலில் அவருக்கு அனுபவமோ அடையாளமோ கிடையாது. இருப்பினும் ’நீதிக்கான போராட்டத்தை’ முன்னிறுத்திய அவருடைய தேர்தல் பரப்புரை, குறுகிய காலத்திலேயே ஸ்லோவாகியாவின் அசைக்க முடியாத ஆளுமையாக அவரை மாற்றியது.
நடந்து முடிந்த தேர்தலில் 58.4 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மாரோஸ் செபகோவிக்கை வென்று உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கபுட்டோவா. அரசியலில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு சூசானா கபுட்டோவா சிறந்த உந்து சக்தியாக திகழ்கிறார்.