ஏமன் நாட்டில்..2000 வருடங்களுக்கு முன்பான “மம்மி” கண்டுபிடிப்பு!

ஏமன் நாட்டின் சனா எனும் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட மம்மியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குழந்தை கருவாக இருக்கும் போது உள்ள சுருங்கிய நிலையில் குடல் நீக்கப்பட்ட உடலாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்று விலங்குத் தோல் போர்த்தப்பட்டுள்ளது. இதில் வேதனை என்னவென்றால் இந்த மம்மியானது ஒரு குப்பைக் கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.  இதனை தொல்லியலாளர்கள் அக்காலத்தில் உடற்கூறு ஆய்விற்காக செய்முறைக்கு இருந்த உடலாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இந்த மம்மியானது கி.மு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு முந்தைய காலக்கட்டத்தினைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். அன்றைக்கு மத்திய கிழக்கினை ஆண்ட அரசன் சபா என்பவரின் காலக்கட்டத்தை சார்ந்த உடலாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இந்த உடலில் குடல் நீக்கப்பட்டிருப்பது உடற்கூறு செய்முறைக்காக என்று ஒருபுறம் எண்ணினாலும், மறுபுறம் மயானக் கொள்ளையர்களின் செயலாகக்கூட குடல் நீக்கப்பட்டிருப்பதற்கு காரணமாக  இருக்கலாம் என்றும் நினைக்காமலிருக்க முடியவில்லை என்று ஒரு தரப்பினர் தகவல் அளிக்கிறார்கள். அராபிய செய்தி ஊடகங்களின் வாயிலாகவும் சில செய்திகள் வெளிவந்துள்ளன. பழங்கால தொன்மங்களைக் கொள்ளையிடுபவர்களின் செயலாக குடல் நீக்கப்பட்டிருப்பது இருக்கலாம் என்று அந்த ஊடங்கங்கள் தெரிவிக்கிறது. இவ்வுடல் கையகப்படுத்தப்பட்டு ஏமனின் அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏமனின் சபா பகுதியைப் பொறுத்தவரை அதிக அளவிற்கு மம்மிகளின் உடல்கள் கிடைக்கக்கூடிய பகுதியாகத்தான் ஏமன் நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த உடல் குப்பையில் இருந்து கிடைத்திருப்பது என்பது ஏமன் நாட்டில் ஏற்பட்ட சிவில் போர்க்காரணமாக உடல்கள் சிதறி திசைமாறி சென்றிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சபாவில் சாதாரணமாக குகைகள், பாறைப் பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் மம்மிகளை கண்டெடுக்கலாம். முன்பு சொன்னதுபோல இதனை தொல்பழங்கால பொருட்களை திருடி விற்பவர்கள் கையில் கிடைத்திருந்து அவர்கள் இவ்வுடலின் வயிற்றில் ஏதேனும் கண்டெடுத்து விற்று பிறகு உடலைக் குப்பைக் கிடங்கில் வீசி எறிந்திருக்கலாம் என்ற கோணத்திலும் சில தொல்லியலாளர்கள் அணுகுகிறார்கள்.

Exit mobile version