இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் மற்றும் பொது மக்கள் கூடுமிடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வின் போது மாணவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர். காயமுற்று இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பால் அந்நாட்டு மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் குண்டு வெடிப்புகளின் எதிரொலியாக நீர்கொழும்பு நகரில் கடைகள் மூடப்பட்டுள்ளதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வன்முறையை எதிர்க்கும் வகையிலும் சமாதானத்தை பேணி காக்கும் எண்ணத்தில் அங்குள்ள கடைகளில் வெள்ளை கொடி பறக்க விடப்பட்டுள்ளது.