யானைகவுனியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினரைப் போன்றே, கொலையாளிகளும் செல்போன் சிக்னல்களை வைத்து கண்காணித்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த பைனான்ஸ் நிறுவன அதிபர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல்குமார் ஆகியோர், கடந்த 11ம் தேதி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா உள்பட 3 பேரை, காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். மூவரும் ஆக்ராவில் சொகுசு விடுதியில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், ஆக்ரா காவல்துறையினர் உதவியுடன் அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜெயமாலாவின் சகோதரரும், வழக்கறிஞருமான விலாஸ் தனிப்படை காவல்துறையினரின் செல்போன் எண்ணை வைத்து, நண்பர் மூலம் அவர்களது நகர்வுகளை கண்காணித்தது தெரியவந்தது. மூவரிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், 5 செல்போன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், மூவரையும் ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாளை சென்னை அழைத்து வருகின்றனர்.