உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப்பாதை – அப்படி என்ன இருக்கிறது அதில்?

இமயமலையின் கடினமானப் பாறைகளைக் குடைந்து அனைத்துவித கால நிலைகளையும் தாங்கும் வகையில் ’அடல்’ சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ’அடல்’ சுரங்கப்பாதையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

’அடல்’ சுரங்கப்பாதை குதிரையின் லாட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இருவழிப்பாதையாகும். சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள ’அடல்’ சுரங்கப்பாதை ரூ.3,500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான இது, இமாலச்சலப் பிரதேசத்தின் மணாலியையும் லஹால் ஸ்பிட்டி பள்ளத்தாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 60 மீட்டர் தூரத்திலும் தீயணைக்கும் கருவிகள், 150 மீட்டர் தூரத்தில் தொலைபேசி வசதி, 500 மீட்டர் தூர இடைவெளியில் அவசர கால வெளியேறும் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய சுரங்கப்பாதை மூலம் மணாலிக்கும் லே-வுக்கும் இடையேயான பயண தூரம் 46 கிலோமீட்டர் குறையும். பயண நேரமும் 7 மணி நேரம் குறையும். தானியங்கி ஆபத்து உணர்கருவிகள், காற்றின் தரத்தை அறியும் கருவிகள், சிசிடிவி கேமராக்கள் எனப் பல அதிநவீன வசதிகளைக் கொண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

14,508 மெட்ரிக் டன் இரும்பு, சுமார் 2,37,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 14 லட்சம் கனமீட்டர் மண் கொண்டு ஆஸ்திரிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. தினமும் 3,000 இலகுரக வாகனங்கள் மற்றும் 1500 கனரக வாகனங்கள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

’அடல்’ சுரங்கப்பாதை திறக்கப்படுவதால் வருடத்தின் அனைத்து மாதங்களிலும் இமாச்சலப் பிரதேசத்தின் குக்கிராமங்களுடனும், லே எல்லைப் பகுதிகளுடனும் சாலை வழித் தொடர்பை மேற்கொள்ள முடியும். இதற்குமுன் கடும் பனிப்பொழிவு காரணமாக 6 மாதங்களுக்கு இப்பகுதிகளில் சாலை வழியாக தொடர்பை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை இருந்து வந்தது.

சீனாவுடன் எல்லைப் பகுதிக்கு போர் தளவாடங்களையும் படைகளையும் வேகமாக நகர்த்த அடல் சுரங்கப்பாதை முக்கியப் பங்கு வகிக்கும்.

Exit mobile version